தமிழகம் முழுவதும் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி, ரூ.50 லட்சம் வரை சுருட்டிய "ஹைடெக்' மோசடி கும்பலை மதுரையில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார் மற்றும் 43 ஏ.டி.எம்., கார்டுகள், ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை தல்லாகுளம் நவநீதகிருஷ்ணன் கோயில் தெருவில், ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, ஒருவர் 15 ஏ.டி.எம்., கார்டுகளை வைத்துக் கொண்டு மாறி, மாறி, மூன்று இயந்திரங்களில் பணம் எடுத்தார். வாட்ச்மேன் இல்லாததால், அடிக்கடி வெளியே செல்வதும், பின் உள்ளே சென்று பணம் எடுப்பதுமாக இருந்தார். இதை கவனித்து, ரோந்து எஸ்.ஐ., லோகேஸ்வரி விசாரித்தார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூற, தல்லாகுளம் ஸ்டேஷனிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். செல்லும் வழியில், ரகசிய எண் எழுதப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை வீசி எறிந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. விசாரணையில், அவர் சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கணேசன்,33, என தெரியவந்தது. போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.
இவர் கொடுத்த தகவலின்படி, சிவகங்கையில் இருந்து அம்பாசிடர் காரில் வந்த நண்பர்கள் நாமக்கல் பரமத்திவேலூர் பிரதாப்,40, இலங்கை மன்னார் மாவட்டம் ஆனந்த் என்ற ரூபன்,42,(இருப்பு, நாமக்கல் அகதிகள் முகாம்), ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் சையது அபுதாகீர்,35, சிவகங்கை கார் டிரைவர் விஜயகுமாரை ரிங் ரோடு - சிவகங்கை ரோடு சந்திப்பில் கைது செய்தனர். இவர்கள் லண்டனில் வசிக்கும் சிலரது உதவியுடன் போலி கார்டுகளை பயன்படுத்தி, சர்வதேச, "லிங்க்' வசதி உள்ள ஏ.டி.எம். மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தை, "சுருட்டி'யுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மையங்களில் மட்டும், ரூ.50 லட்சம், "சுருட்டியது' தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து சிட்டி வங்கி, எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிகளின் 43 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.8 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு, பகலாக "சுருட்டல்:'"ஒரே ஊரில் பணம் எடுத்தால் சிக்கிக் கொள்வோம்' என, ஊர் ஊராக சென்று பணம் எடுத்துள்ளனர். மதுரை, சிவகங்கையில் பணம் எடுப்பதற்காக, நவ., 24ல் மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். வெளிநாட்டில் வங்கி பரிவர்த்தனை துவங்கும் நேரத்தை கணக்கிட்டு, இங்கே இரவு, பகலாக பணம் எடுத்துள்ளனர்.
வங்கிகளிடம் விசாரணை :போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் கூறியதாவது :இருவாரமாக முன் இரவு, பின் இரவு என, போலீசார், 15 குழுக்களாக பிரிந்து ரோந்து செல்கின்றனர். அதற்கு கிடைத்த பலன்தான் இது. இக்கும்பலுக்கு லண்டனில் இருந்து கார்டு தயாரித்து கொடுப்பதாக தெரியவந்துள்ளது. ஷாப்பிங் இடங்கள், பெட்ரோல் பங்க் போன்றவற்றில் ஏ.டி.எம். கார்டை கொடுக்கும்போது, ரகசிய கேமராக்கள் அதை பதிவு செய்து, ரகசிய எண்ணை கண்டறிந்து கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது.கைதான கும்பலுக்கு, ஏ.டி.எம். மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்துக் கொடுத்தால், ரூ.500 கமிஷன் தரப்பட்டுள்ளது. இதற்கு மூளையாக செயல்படும் கும்பல் குறித்து விசாரித்து வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கார்டுகளில் தமிழ் பெயர்கள் இருப்பதால், அதுகுறித்து வங்கிகளிடம் விசாரிக்க உள்ளோம், என்றார். பின்னணியில் விடுதலை புலிகள்?போலீஸ் கூறுகையில், ""விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுகளில் வசிக்கும் ஆதரவாளர்கள் தயாரித்துக் கொடுக்கும் போலி ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, பணம் எடுப்பது வழக்கம். அதேமுறையில், பணம் எடுத்துள்ளதால், இக்கும்பலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்,'' என்றனர்.
No comments:
Post a Comment