கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரது சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் ஏராளமான இரும்பு சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திலும் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்பு சுரங்கங்கள் உள்ளன. ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த கால கட்டத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் 68.5 ஏக்கர் பரப்பளவுள்ள இரும்பு சுரங்கம் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை எடுக்க ஏராளமானவர்கள் போட்டியிட்ட நிலையில், ஜனார்த்தன ரெட்டிக்கு முறைகேடாக சுரங்கம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, அப்போது தொழிற்சாலை துறை செயலராக இருந்த ஸ்ரீலட்சுமி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. தற்போது ஸ்ரீலட்சுமி குடும்ப நலத்துறை கமிஷனராக உள்ளார். இவரது ஐ.பி.எஸ்., கணவர் கோபி கிருஷ்ணா, சி.ஐ.டி., பிரிவின் ஐ.ஜி.,யாக உள்ளார்.
ஏற்கனவே, சி.பி.ஐ., ஸ்ரீலட்சுமியிடம் மூன்று முறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் லட்சுமி அப்ரூவராக மாறுவார், என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நேற்று, ஸ்ரீலட்சுமி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் தங்கள் காவலில் ஒப்படைக்கும் படி சி.பி.ஐ., கோரியது. இருதய நோயாளி என்பதால் சிறையில் தனக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும், என லட்சுமி கோரினார்.மீண்டும் இன்று, லட்சுமியை ஆஜர்படுத்தும் படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்றிரவு லட்சுமி தங்க வைக்கப்பட்டார். சுரங்க வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 3ம்தேதி சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது."ஜனார்த்தன ரெட்டிக்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டது மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உத்தரவின் பேரில் தான் நடந்தது. எனவே இதற்கு நான் பொறுப்பு அல்ல' என, லட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment