|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

முல்லை பெரியாறுக்காக குரல் கொடுக்க தமிழகத்தில் யாருமில்லை!


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தையே கலக்கி விட்டனர் கேரளாவைச் சேர்ந்த அத்தனை எம்.பிக்கள். ஆனால் அவர்களின் தர்ணா போராட்டத்திற்கு கவுண்டர் தரும் வகையில் ஒரு தமிழக எம்.பியைக் கூட காண முடியவில்லை. திமுக எம்.பிக்கள் கனிமொழியின் ஜாமீனுக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்.பிக்களோ லோக்சபாவில் நடந்த அமளி துமளியில் சீரியஸாக மூழ்கியிருந்தனர். முல்லைப் பெரியாறு அணைக்காக குரல் கொடுக்க நேற்று ஒரு தமிழக எம்.பி. கூட இல்லாதது தமிழக மக்களை விரக்தியில் தள்ளியது. முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்ட வேண்டும் என்று தீர்மானமாக உள்ளது கேரளா. இதற்காக நேற்று கேரளாவின் நான்கு மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

அதேபோல டெல்லியிலும் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் நேற்று சீன் கிரியேட் செய்து விட்டனர். லோக்சபாவில் கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட - கோஷமிட்டனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்திலும் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த எம்.பிக்களிடம் தமிழகம் மீது குற்றம் சாட்டி தங்களுக்கு ஆதரவு சேகரித்தனர். மேலும் டேம் 999 படத்தைப் பாருங்கள், அப்போது எங்களது பரிதாப நிலை தெரியும் என்றும் படம் குறித்தும் விளம்பரம் செய்தனர். மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி வீடு முன்பும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கேரள எம்.பிக்களின் போராட்டம் குறித்த பேச்சாகவே இருந்தது. பல மாநில எம்.பிக்களும் கேரளா ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டது போல என்று எண்ணும் அளவுக்கு கேரள எம்.பிக்களின் செயல்பாடுகள் காணப்பட்டன. இப்படி நடந்தும், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களில் ஒருவர் கூட எந்த வகையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஒரு எதிர்ப்புத் தர்ணாவைக் கூட யாரும் நடத்தவில்லை. குறைநத்பட்சம் லோக்சபாவில் கூட கேரள எம்.பிக்களின் கூற்றை மறுத்து யாரும் பேசக் கூட இல்லை.

திமுக எம்.பிக்கள் அத்தனை பேரின் கண்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் தருவார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் இருந்தது. அங்குதான் கிட்டத்தட்ட அத்தனை பேரும் கூடியிருந்தார்கள். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் சிலர் கூடியிருந்தனர். டி.ஆர்.பாலுவைப் பிடிக்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு கனி மொழி குறித்த கவலையில் சுற்றிக் கொண்டிருந்தார் அவர். சரி அதிமுக எம்.பிக்களாவது ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அவர்களும் கப்சிப்பென்றிருந்தனர். மாறாக, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அரசுக்கு எதிரான ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்த அமளி துமளிகளில் அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து படு பிசியாக காணப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினரும் கூட இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. சிபிஐ தேசியச் செயலாளர் ராஜாவைக் கூட காண முடியவில்லை. மொத்தத்தில் நேற்று தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக அத்தனை தமிழக கட்சிகளும் நேற்று டெல்லியில் திராட்டில் விட்டு விட்டன. 39 எம்.பிக்கள் இருந்தும், கேரளாக்காரர்கள் நடத்திய போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு எம்.பி கூடவா இல்லை கனிமொழி பிரச்சினை முடிந்து விட்டதால் 'ஃப்ரீ' ஆகியுள்ளதைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள் இன்றுதான் பிரதமரைச் சந்திக்கப் போகின்றனராம்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...