67 ஆயிரம் மாத சம்பளத்தில் மின் வாரியத்தில் வேலை!
மின் துறை இயக்குனர் பதவி பணியிடம் காலியாவதால், நேரடித் தேர்வில் அந்த இடம் நிரப்பப்பட உள்ளது. இதில் சேர விரும்புவோர், டிச., 12 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக மின் வாரிய மின் கட்டணப் பிரிவு இயக்குனர் பதவிக்கு, நேரடித் தேர்வு மூலம் ஆள் சேர்க்கப்படும். பொருளாதாரவியல் அல்லது வணிகவியலில் முதுகலைப் பட்டம், எம்.பி.ஏ., நிதி மேலாண்மை, சார்ட்டட் அக்கவுன்டன்ட், காஸ்ட் அக்கவுன்டன்ட் ஆகிய இவற்றில், குறைந்தது ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதி, கணக்கியல், மின் துறையில் கட்டண மேலாண்மை, மின் துறை நிர்வாக அளவில், ஏதாவது ஒரு பிரிவில் ஏழு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதி பெற்றவர்கள், அடுத்த மாதம் 12ம் தேதிக்குள், எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். கிரேடு-1 பதவியில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, 37 ஆயிரத்து 400 முதல் 67 ஆயிரம் வரையில், 10 ஆயிரம் ரூபாய் கிரேடு தொகை இணைத்து வழங்கப்படும். கிரேடு-2 ல் தேர்வாகும் நபருக்கு, 37 ஆயிரத்து 400 முதல், 67 ஆயிரம் வரையிலும், 8,900 ரூபாய் வரை கிரேடு தொகையும் இணைத்துத் தரப்படும். கிரேடு-1ல் தகுதியுள்ளவர் விண்ணப்பிக்காவிட்டால், கிரேடு-2ல் உள்ளவர் தேர்வாவார். விண்ணப்பிப்பவருக்கு, குறைந்தது 40 முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழக அரசின் வேறு துறைகள், பொதுத் துறைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களும், துறை மாறுதல் உத்தரவில், வர முடியும். அதற்கு, சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து, தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியத்தில், கட்டணப் பிரிவு நிதிக் கட்டுப்பாட்டாளராக பாலதண்டாயுதபாணி பணிபுரிகிறார். இவர், அடுத்த மாதம் ஓய்வு பெறுவதால், புதிய மின் கட்டண இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment