கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்து தூண்டி விட்டவர்கள் மீது, 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், வன்முறையை தூண்டியோர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டமான கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, ஒரு குழுவினர், போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், உதயக்குமார் என்பவர் தலைமையில், ஒரு தரப்பினர், தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூடங்குளம் அருகிலுள்ள இடிந்தகரை லூர்து மாதா சர்ச் வளாகத்தில், பந்தல் போட்டு போராட்டம் நடக்கிறது. இதற்கு, சர்ச் பாதிரியார் ஜெயக்குமார், கூத்தப்புளி பாதிரியார் சுசிலன் மற்றும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேபோல், புஷ்பராயன் என்பவரும், சேரன்மகாதேவி பாதிரியார் ஜேசுராஜ் என்பவரும், தீவிர ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள், போராட்டக்குழு சார்பில், தமிழக அரசின் குழுவிலும் இடம் பெற்றுள்ளனர்.இந்த பாதிரியார்களுக்கு தலைமை பாதிரியாராக பணிபுரியும், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு, பல வகையில் ஆதரவாக செயல்பட்டார். பல முறை போராட்ட களத்திலும் பங்கேற்றார்.
இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு, கூடங்குளம் அணு உலைக்கு செல்லும் வழியில், அணு எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அணு உலையின் பணிக்கு சென்ற அதிகாரிகள், ஊழியர்கள், விஞ்ஞானிகள் வழி மறிக்கப்பட்டனர். சாலைகளில் பாறாங்கற்கள், உடைந்த மரங்களை போட்டு, இந்திய அணுசக்தி கழக வாகனங்களை செல்ல விடாமல் மறித்தனர். இதேபோல், கூடங்குளத்தைச் சுற்றி வாடகை வீடுகளில் தங்கிருந்த, வெளிமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். வேலைக்கு செல்ல விடாமல் ஒரு குழு, அவர்களை தடுத்ததுடன், அவர்களை ஊரை விட்டு வெளியே விரட்டியது. இதனால், 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி கூலித்தொழிலாளர்கள், வாழ்வாதாரம் இழந்து, பிழைக்க முடியாமல் ஊர்களுக்கு சென்று விட்டனர்.இதில், மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தொழிலாளர்களே இருந்ததால், அவர்களின் பிழைப்பு கேள்விக்குறியாகி விட்டது. கான்ட்ராக்ட் நிறுவனத்தினரும் விரட்டப்பட்டனர்.
இதுமட்டுமின்றி, அணு விஞ்ஞானிகள், அதிகாரிகள் தங்கியிருக்கும் அணுவிஜய் நகரியத்திற்கு செல்லும் குடிநீர் குழாய்களை, சமூக விரோத தேச துரோகிகள் சிலர் உடைத்து விட்டனர். இதுபோன்ற வன்முறை சம்பவங்களால், கூடங்குளம் அணு உலை பணிகள் பாதிக்கப்பட்டதுடன், இந்திய அணுசக்தி துறைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.இச்சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவின் பேரில், அணுசக்தி அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலாளர்கள் என, பல தரப்பில் நெல்லை மாவட்ட போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய உள்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் போலீசிடம் தரப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில், அணு எதிர்ப்பு வன்முறையாளர்கள் மீது, போலீசார் இதுவரை, 66 எப்.ஐ.ஆர்.,கள் பதிவு செய்துள்ளனர். இவற்றில், வன்முறையாளர்கள், அவர்களை தூண்டிவிடுவோர், உடந்தையாக இருந்தோர், சட்டவிரோதமாக உண்ணாவிரதம் இருந்தோர், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தோர், போராட்டக்களத்தில் பங்கேற்றோர் என, அனைவரது பெயர்களும் இணைக்கப்பட உள்ளது.தொழிலாளர்களை விரட்டியோர், கான்ட்ராக்டர்களை மிரட்டியோர், மத்திய அரசின் குடியிருப்புக்கு சொந்தமான தண்ணீர் குழாய்களை உடைத்தோர் என, பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இந்த வழக்குகளில், இந்திய அரசுக்கு எதிராக செயல்படுதல், நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் விளைவித்தல், இந்திய அரசின் ரகசிய விவகாரங்களில், அத்துமீறி தலையிடுதல், நாட்டுக்கு துரோகம், அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், பொய்த்தகவல்களால், அப்பாவி மக்களை பீதிக்குள்ளாக்குதல் என்பன போன்ற குற்றப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், வழக்குகளில் உள்ளவர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை பாயும். அதற்கான பணிகளில், மத்திய உள்துறை ஈடுபட்டுள்ளது.இவ்வாறு, மத்திய உள்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment