ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரேவிடம் ஒப்படைத்ததற்காக வருந்துகிறேன் என, 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த போது, அவருக்கு ஆதரவாக 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத்தும், அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
இது குறித்து ஷாம்பு தத் கூறியதாவது:ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யக்கோரி நான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, கிரண்பேடியும், சுவாமி அக்னிவேஷும் என்னை சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அவர்கள் பேச்சை கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால், இப்போது அது தவறு என்பதை உணர்கிறேன். நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருப்பவர்கள்.அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை. அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்த நம்பகத்தன்மை போய் விட்டது. ஹசாரேவின் பிரசாரம் எல்லை மீறுவது சமீப காலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பார்லிமென்டில் எந்த விதமாக மசோதா தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்பேன். காங்கிரசை எதிர்க்கப் போவதில்லை, என்றவர், ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். நடைபெற உள்ள உ.பி., உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த நடவடிக்கை குழந்தைத் தனமானது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஜன் லோக்பால் மசோதா விஷயத்தில் சில பிரிவுகளில் எங்களுக்கு அவர்களுடன் உடன்பாடில்லை.
ஊழல் செய்து வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்ட கமிஷன், மாதிரி சட்ட மசோதாவை, அரசுக்கு அனுப்பியது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு, கடந்த 12 ஆண்டுகளாக மவுனம் சாதித்து வருகிறது. முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மசோதா, லோக்பால் மசோதாவை விட முக்கியமானது. இந்த மசோதாவை அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லயென்றால், மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவேன்.இவ்வாறு ஷாம்பு தத் கூறினார்.
No comments:
Post a Comment