|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

இந்திய வங்கிகள்-தரத்தை இறக்கியது 'மூடிஸ்'!


அடுத்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளின் வர்த்தக நிலைமை மோசமாகும் என்று சர்வதேச பொருளாதார ரேட்டிங் அமைப்பான மூடிஸ் (Moody's) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வங்கிகளின் பங்கு விலைகள் சடாரென சரிந்தன. அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகள் ''stable'' (ஸ்திரமான நிலை) என்ற நிலையிலிருந்து ''negative'' (எதிர்மறையான நிலை) என்ற நிலைமைக்குப் போகலாம் என மூடிஸ் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய வங்கிகளின் சொத்து நிலைமை, மூலதனமயமாக்கம் (capitalisation), லாப விகிதம் ஆகியவை குறைந்து வருகின்றன. மூலதனம் சரிந்து வருவதால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகளுக்கு நிதித் தட்டுப்பாடு உருவாகலாம் என மூடிஸ் கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்திய வங்கிகளுக்கு மிக வலுவான வாடிக்கையாளர்கள் இருப்பதாலும், அவர்களது முதலீடுகள் வலுவாக இருப்பதாலும், இந்திய வங்கிகளில் அரசின் முதலீடுகளும் அதிகமாக இருப்பதாலும் பிரச்சனைகளை வங்கிகள் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளாக 8.4 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்து வந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும் சந்தையில் நிதித் தட்டுப்பாடும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதிலும் பிரச்சனை நிலவுகிறது. இந்த நிதிப் பிரச்சனைகள் காரணமாக இதனால் வங்கிகள் கடன் வழங்கும் விகிதம் குறையலாம். இதன் காரணமாக, வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாடும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு பிரச்சனை நிறைந்ததாகவே இருக்கும் என்று மூடிஸ் கூறியுள்ளது. மூடிசின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தையில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பங்குகள் இன்று வீழ்ச்சியைக் கண்டன. மூடிசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்திய வங்கிகள் மிகவும் பலத்துடனும் ஸ்திரமாகவும் இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் கூறியுள்ளார். இதே கருத்தையே பெரும்பாலான வங்கிகள் கூறியுள்ளன. வங்கிகள் என்னதான் கூறினாலும், மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் அமைப்பு அறிவித்துள்ள இந்த தரம் இறக்கம் காரணமாக, இந்திய வங்கித்துறை பல சிக்கல்களை சந்திக்கும் என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...