மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேர் மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு தி.மு.க., அரசு ஆட்சியில் இருந்தபோது, அரசின் திட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு சென்று சேரவும், அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்தோர் பற்றிய விவரங்களை சேகரித்து தரவும், மக்கள் நலப் பணியாளர்கள். 25 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு. தொகுப்பு ஊதியமாக 200 ரூபாய் வழங்கப்பட்டது.கடந்த 1991ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஜூலை மாதம் 13ம் தேதி, மக்கள் நல பணியாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, 1996ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் அத்தனை பேரையும், மறுநியமனம் செய்து உத்தரவிட்டது. அப்போது,தொகுப்பு ஊதியமாக 500 ரூபாய் அளிக்கப்பட்டது.
பின், 2001ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் இரண்டாவது முறையாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்தது.கடந்த 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் திரும்பவும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இம்முறை, 12 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட்டனர். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, முழு அளவில் செயல்படுத்துவதில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடைய, தொகுப்பு ஊதியத்தை 2009ம் ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாய் சிறப்பு விகித ஊதியமாக, அப்போதைய தி.மு.க., அரசு நிர்ணயித்தது. இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மக்கள் நல பணியாளர்கள் நிலைமை கேள்விக்குறியானது. பணிநீக்கம் செய்யப்படுவோம் என, பணியாளர்களும் பயத்தில் இருந்து வந்தனர். எதிர்பார்த்தபடி, கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி மக்கள் நல பணியாளர்களுக்கு, எவ்வித வேலையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இறுதியில், நேற்று தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண். 86ன் படி, தமிழகத்திலுள்ள மக்கள் நல பணியாளர்கள், 12 ஆயிரம் பேரும், ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment