கோவையை வஞ்சிக்கும் தெற்கு ரயில்வேயை எதிர்த்து நடக்கும் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில், பாகுபாடின்றி அனைவரையும் பங்கேற்க செய்யும் வகையில்,
வாகன பிரசாரம் நேற்று துவங்கியது."கோவை நகருக்கு போதிய ரயில் சேவையை வழங்க
வேண்டும்' என, தெற்கு ரயில்வேயை வலியுறுத்தி, வரும் 21ம் தேதி கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவைச் சங்கம் முன், வரும் 21ம் தேதி மாலை 4.00 மணிக்கு
நடக்கிறது. இதில் பெரும் திரளான மக்களை பங்கேற்க செய்யும் வகையில், நேற்று
பிரசார வாகனம் புறப்பட்டது. காந்திபுரத்தில் பிரசார வாகனத்தை துவக்கி
வைத்து, எம்.பி., நடராஜன் பேசுகையில், ""ஒவ்வொரு பகுதியிலும், வீடு வீடாக
சென்று துண்டு பிரசுரங்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும், அந்தந்த
பகுதிற்கு பிரசார வாகனத்தை அழைத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும். நாலு பேருக்கான கோரிக்கை அல்ல; கோவை மக்களுக்கான கோரிக்கை.
மத்திய அரசிடம் வலியுறுத்தும் கோரிக்கை என்பதால், பாகுபாடின்றி அனைவரும்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்'' என்றார்.போராட்டக்குழு
ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் பேசுகையில், ""அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட
கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எந்த அரசியல்
கட்சியும் முன் நிற்பதில்லை; கட்சிகள், சங்கங்கள் போன்ற அனைத்து
அமைப்புகளும் முன் நின்று போராட்டத்தை நடத்துகின்றன. ஒரு மிகப்பெரிய
எழுச்சியை ஏற்படுத்தினால், பெரிய நன்மைக்கு வித்திடும். இதனால், வரும் 21ம்
தேதி நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்''
என்றார்.பங்கேற்ற அனைவரும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில்,
பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்தனர். கோவை மக்களை
வஞ்சிக்கும் தெற்கு ரயில்வேக்கு எதிராக, மாபெரும் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம்; கோவையை புறக்கணித்து செல்லும் 13 ரயில்களை, கோவைக்கு
திருப்புக; பாண்டிச்சேரி, பெங்களுரூ, திருச்சி, தஞ்சாவூர், ராமேஸ்வரம் ஆகிய
பகுதிகளுக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், பிரசார
வாகனம் மற்றும் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றிருந்தன.கோவை ரயில் பயணிகள்
நலச்சங்க தலைவர் ஜமீல், பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் கோபால், ராக்
அமைப்பு செயலாளர் ரவீந்திரன், "கோப்மா' தலைவர் மணிராஜ், வணிகர் பேரவை
சங்கத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment