|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

கென்யா - கடவுளின் நாடு!










நான் கென்யா செல்கிறேன்' என்றதும் என் நண்பர்கள் பலரும் கேட்டனர்: "கென்யாவா அங்கே என்ன இருக்கு?' என்று.  அங்கு என்ன இல்லை? பரந்து விரிந்த காடுகளும், பயமின்றித் திரியும் விலங்குகளும், நட்போடு பழகும் மனிதர்களும் நிறைந்த அற்புத நாடு கென்யா!  நானும் என் மகள்கள் இருவரும், சிறு தூறல் விழுந்து கொண்டிருந்த அதிகாலையில் நைரோபி ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் கால் பதித்தோம். ஜாகாரண்டா மரங்கள் ஊதாப்பூக்களை வாரிக் கொட்டியிருந்தன. எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் மெதுவாகவே சென்று கொண்டிருந்தன. யாரும் யாரையும் முந்தவில்லை. காது கிழிகிற மாதிரி ஹாரன் ஒலிக்கவில்லை. சாலையின் இரு புறங்களிலும் பெரிய மரங்கள். அவற்றின் உச்சியில் பெரிய கொக்குகள் கூடு கட்டியிருந்தன. சாலையில் இத்தனை பரபரப்பு இருந்தும் அவை பாட்டுக்குப் பயமின்றி உலவின. 

நைரோபியில் ஒட்டகச்சிவிங்கிக் காப்பகத்திற்குச் சென்றோம். அங்கே நெடிய அழகிய ஒட்டகச்சிவிங்கிகள் பெரிய கண்களுடன் நிதானமாக நடைபோட்டுக்கொண்டிருந்தன. காப்பகத்தின் காப்பாளர் எங்களிடம் சிறிது உணவைக்கொடுத்து அதைச் ஒட்டகச்சிவிங்கிகளுக்குக் கொடுக்கச் சொன்னார். அவை சிறிதும் பயப்படாமல் எங்கள் கைகளிலிருந்த உணவை கவ்விச் சாப்பிட்டன.  மறுநாள் நக்குரு ஏரியை நோக்கிப் பயணித்தோம். இந்த ஏரி ஃப்ளமிங்கோ பறவைகளுக்குப் பிரசித்தம். வனப் பகுதிக்குள் நுழைந்ததும் வரிக்குதிரைகளும் "கசல்' என்னும் மான்களும் கூட்டம் கூட்டமாய்த் தென்பட்டன. எங்கள் வழிகாட்டி யூசுப், ""எல்லா வகையான விலங்குகளையும் நீங்கள் பார்க்கலாம்... ஆனால் சிறுத்தையைப் பார்ப்பது மட்டும் கடினம். அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம்'' என்றார். 

அதிர்ஷ்ட தேவதையின் காதில் அது விழுந்திருக்க வேண்டும்! விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மேல் ஒரு சிறுத்தை அரைத் தூக்கத்தில் படுத்துக் கிடந்தது.  இன்னும் "டோப்பி' எனப்படும் பெரிய மான்கள், காட்டெருமைகள், வெள்ளை நிறக் காண்டாமிருகங்கள் ஆகியவற்றையும் பார்த்தோம். ஒரு நீண்ட வளைவில் சென்று திரும்பினோம்....... அடடா... அடடா... என்ன அற்புதம்!  நீல நிறத்தில் ஏரி. அதன் ஓரங்களில் "பிங்க்' நிறத்தில் பார்டர் போட்டது போல் ஃப்ளமிங்கோப் பறவைக்கூட்டம். பறவைகளின் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. ஏகாந்தம்!  "கிரேட் ரிப்ட் வேலி' என்று பூகோளத்தில் நாம் படித்திருப்போமே, அந்த அகண்ட பள்ளத்தாக்கினைக் கடந்து பயணித்தோம். "மவுண்ட் கென்யா சபாரி கிளப்' என்னும் விடுதியை நெருங்கும் நேரம், ஐந்து சிங்கங்கள் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டிருந்த அரிய காட்சியைக் கண்டோம்.  விடுதியின் பரப்புக்குள் நுழையும்போது கூட்டம் கூட்டமாக வைல்ட் பீஸ்ட் நின்று எங்களை வியப்புடன் பார்த்தன. இம்மிருகங்களை டிஸ்கவரி சேனலில்தான் பார்த்திருக்கிறோம். இங்கே பத்தடி தூரத்தில் பார்க்கும்போது பரவசமாக இருந்தது. 

 மறுநாள் புதர்க் காடுகளிடையே பயணம். போகிறோம்... போகிறோம்... போய்க்கொண்டே இருக்கிறோம். ஒருவழியாக "கிகியோ கன்சர்வன்சி' என்னும் இடத்தை அடைந்தோம். அது தனியாருக்குச் சொந்தமான இடம். கென்யாவில் குடியமர்ந்துள்ள இந்தியருக்குச் சொந்தமான இடம். வன உயிரினங்களின் பாதுகாப்புக்கென்றே அவர் இந்த இடத்தை வாங்கிப் பாதுகாக்கவும் செய்கிறார் என்பதை அறிந்தபோது பெருமையாக இருந்தது.  அங்கு ஏழே ஏழு குடில்கள்தான் இருந்தன. அவையும் வரவேற்பறையை விட்டுத் தள்ளி இருந்தன. ஒவ்வொன்றும் வெகு தொலைவில் இருந்தன. குடில்களுக்குப் போகும் பாதை நெடுகிலும் பெரிய, உயரமான புதர்கள். அருகில் அகன்ற ஆறு ஒன்று சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவ்விடுதியில் மின்சாரம் சம்பந்தப்பட்ட அனைத்தும் சூரிய சக்தியில் இயங்குபவை.  ""அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் மொத்தமாக இருட்டில் கிடக்க வேண்டியதுதான்...'' என்று விடுதியின் பொறுப்பாளர் கூறினார்.  நாங்கள் பத்திரமாக இருப்பதை என் கணவரிடம் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதியில் எங்களிடம் செல்போனும் இல்லை. தொலைபேசி இல்லை. ""ஏதாவது ஆபத்து என்றால் எப்படித் தொடர்பு கொள்வது?'' என்று கேட்டேன்.  அவர் புன்னகையோடு, ""பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. சிறுத்தைகளும் காட்டுப் பன்றிகளும் மட்டும்தான் வரும். குடில்களுக்கு வெளியில் பழங்குடிகளான "மஸôய்' இனத்தினர் காவல் இருப்பார்கள்'' என்று கூறிவிட்டு, ஒரு டார்ச் லைட்டையும் கொடுத்தார். 

எங்களுக்குத் துணை ஒரே ஒரு சமையல் செய்யும் பெண்ணும், ஒரு சர்வரும் (கென்யாவில் விடுதிகளில் விருந்தினர் மட்டுமே தங்கலாம். வாகன ஓட்டுநர்கள் அருகில் 10,15 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராமங்களில்தான் தங்கிக்கொள்ள வேண்டும்!)  இருள் நீங்கிவிட்டது. மசாய்க் காவல்காரர்கள் எங்களைக் குடில்களுக்கு அழைத்துச் சென்றனர். இரவு நேரத்தில் காடுகள் உயிர் பெறும் அதிசயத்தைக் கண்டேன். நேரம் ஆக ஆக ஏதேதோ பயமூட்டும் ஒலிகளும் திடீரென்று கிறீச்சிடும் பறவைகளின் சத்தங்களும் கிளம்பி பயமுறுத்த ஆரம்பித்தன.  ஜிம் கார்பெட், ஆண்டர்சன் கதைகள் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தன. ரொம்ப நேரம் கழித்து என்னையறியாமல் தூங்கினேன்.  இரவு முழுதும் சிறுத்தைகள் என்னையும் என் பெண்களையும் "தரதர'வென்று இழுத்துப் போவதுபோல் கனவு கண்டேன். அத்துவானக் காட்டுக்குள்ளே நாங்கள் மூன்று பெண்கள் தன்னந்தனியாக, எங்களுடன் வந்த சக பிரயாணிகளோடு தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருந்ததை இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது.  மறுநாள் காலை, உலகப் புகழ் பெற்ற மஸôய் மாராவுக்குப் பயணித்தோம். ஆகா... கண்ணுக்குத் தென்பட்ட இடமெல்லாம் மஞ்சள் நிறப் புல்வெளி. மஸôய் மாரா முழுதும் புல்லும் குட்டையான மரங்களும்தான். ஒரே நாளில் எல்லா மிருகங்களையும் பார்த்தோம். கூட்டம் கூட்டமாக ஆப்ரிக்க யானைகள், காட்டுப்பன்றிகள், வரிக்குதிரைகள், மான்கள், ஒட்டகச் சிவிங்கிகள், காட்டெருமைகள், வைல்ட் பீஸ்ட், பபூன் குரங்குகள், கீரிப்பிள்ளைகள்,கழுதைப் புலிகள், நெருப்புக் கோழிகள், செக்ரெட்டரி பறவைகள் மற்றும் பெயர் தெரியாத பலவகைப் பறவைகளைப் பார்த்தோம். 

 இன்னும் உள்ளே சென்றபோது 13 சிங்கங்கள் கூட்டமாக ஒரு வைல்ட் பீஸ்ட்டை வேட்டையாடிக் கொன்று சாப்பிட்டதைப் பார்த்தோம். "ஹிப்போ பூல்' என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கில் நீர்யானைகள் தண்ணீரில் அமிழ்ந்து எழும்பி மிதந்து கொண்டிருந்தன. முதலைகள் வெயிலில் இளைப்பாறிக் கொண்டிருந்தன. ஒரு மேடு ஏறிக் கீழே இறங்குகிறோம் - ஒரு புதருக்கு அருகில் ஒரு பெரிய ஆண் சிங்கம் உட்கார்ந்திருந்தது. புதரின் பின்புறம் பெண் சிங்கம் படுத்துக் கொண்டிருந்தது.  யூசுப் காரை இரண்டடி தூரத்தில் கொண்டு நிறுத்தினார். நெஞ்சு படபடக்க காமிராவிலும் படபடவென்று படமெடுத்தோம். சிங்கங்கள் இரண்டும் எங்களைப் பொருட்படுத்தவேயில்லை!  கென்யா தேசத்து மக்கள் காடுகளையும், விலங்குகளையும் நேசிப்பதோடு பூஜிக்கவும் செய்கின்றனர்.


 "கடைசி மரமும் வெட்டுண்டு
 கடைசி நதியும் விஷமேறிக்
 கடைசி மீனும் பிடிபட
 அப்போது தான் உறைக்கும்-
 பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!'
 - இச்செவ்விந்தியப் பாடலை நினைவில் கொண்டு இயற்கையையும் அதன் வளங்களையும் காத்து இயற்கையோடு இணைந்து வாழ்வோம்! 


நன்றி: இரா. கற்பகம், கோவை. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...