ஈரோடு காவிரிக் கரையில் உள்ள மரத்தடி விநாயகர் கோவிலில், நேற்று ஆடு செய்த
பூஜையால், பரபரப்பு ஏற்பட்டது. கார்த்திகை மாதல் முதல் நாளான நேற்று
அதிகாலை முதலே, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், ஏராளமான ஐயப்ப
பக்தர்கள் குவிந்தனர். காவிரியில் நீராடி, ஆற்றங்கரையில் உள்ள ஐயப்பன்
கோவிலில் மாலையணிந்து, விரதத்தைத் துவக்கினர். காவிரி ஆற்றங்கரையில் உள்ள
மரத்தடியில், விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் ஏராளமாக உள்ளன. பக்தர்கள்
சிலர், தங்களது பழைய துளசி மணி மாலையை இங்கு வைத்து விட்டு, புதிய மாலையை
அணிந்து கொண்டனர். விரதத்தைத் துவக்கிய பக்தர்கள் சிலர், இந்த விநாயகரை
வணங்கிச் சென்றனர். அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டுக் கிடாய், இதையே
பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென விநாயகர் சிலை அமைந்துள்ள மேடை மீது
ஏறியது. மேடையின் மீது கிடந்த துளசி மணி மாலைகள் ஒவ்வொன்றாகக் கவ்வி
எடுத்து, அருகே இருந்த நாகர் சிலைகள் மீது அணிவித்தது. அவை, சிலைகளில்
இருந்து நழுவி கீழே விழுந்தன. அதன் பின், அருகிலிருந்த துளசி இதழ்களைக்
கவ்வி எடுத்து, அவற்றையும் சிலை மீது போட்டது. இதைப் பார்த்த பக்தர்கள்
சிலர், விநாயகர் கோவில் அருகே, ஆர்வமாக ஓடி வந்தனர். மிரண்டு போன ஆடு,
மேடையில் இருந்து கீழிறங்கிச் சென்று விட்டது!
No comments:
Post a Comment